நீ தந்த நினைவுப் பரிசு
ஒன்று மட்டுமே
யாருமறியாது
எப்போதும் என்னுடனே...
எப்போதும் உன்னையே
முதலாய் எண்ணியவளிடம்
எப்படி உரைத்தாய்
என் முடிவே நீதானென்று...
விலகிடு விலகிடு என்றாயே
மறுக்கவில்லை
ஒற்றை வார்த்தையில் உரைத்துவிடு
எனை மறந்து நீ
மகிழ்வாயென்று...
உன்னை மறக்க உரைத்த நீ
மறக்கும் வழியை மட்டும்
உரைக்க மறுத்ததேன்
எப்படி முடியும்
நீயே அறியாததை...
அலை வந்து அழிப்பதைஅறிந்தும்
கரை மணலில் எழுதும் சிறுமி போல்
நீ வந்து அழிக்க வேண்டுமென்பதற்காகவே
வாசலில் தவம் கிடக்கும்
நான் கிறுக்கும் கிறுக்கல்கள்..
வேடன் விரித்த வலையில்
சிக்கிய குருவி
பத்திரமாய் திரும்பி
மறுபடியும் மாட்டிக் கொண்டது
மீள் முடியா பாசவலையில்...
சிறகுகள் விரிந்தன
பறவைக்கோ மனமில்லை பறந்திட
முடிவில் ஒடித்துக் கொண்டது
தானே தன் சிறகினை...
கடவுளிடம் எப்போதும் மன்றாடுவேன்
மீண்டும் மீண்டும்
பாவியாய் பிறக்க வேண்டும்
அங்கும் உனைத் தேடித் தேடி
அலைய வேண்டும்
முடிவில் உன் மடியில்
உயிர் பிரிய வேண்டும்...
வாழ்வு பறிபோன போது கூட
கலங்கினதில்லை
இப்போது மட்டும் எதற்காக?
உனக்காவது புரிகிறதா?
எப்போதும்
தனிமையை விரும்பும் உன்னிடத்தே
எப்படி உரைப்பேன்
நான் உன்னிடம் வெறுப்பது
அது ஒன்றே...
