தனிமையின் பிடிகளை தூர வீசி என் நேசித்த நினைவுகளுடன் நீண்ட நாட்களின் பின் உறவுகளை நாடி அநேக நமஸ்காரங்களுடன் வாழ்வியலின் தத்துவத்தை எனக்கு உணர வைத்த பிறிதொரு பதிவில் சந்திக்கிறேன்.
தெள்ளிய நீர் நிறைந்த அழகிய தாமரைத் தடாகம்.அதில் ஓராயிரம் தாமரை மலர்கள் பூத்துக் குலுங்கின.அம்மலர்களின் தேனமுதை பருகுவதற்காக பல வண்டுகள் ரீங்காரமிட்டபடி பறந்து திரிந்தன.அதில் ஒரு கருவண்டு மிதமிஞ்சிய தேனை அருந்திவிட்டு தாமரையில் மதிமயங்கி சாய்ந்தது.காலம் கடந்து கொண்டிருந்ததை அந்த வண்டு உணரவில்லை.
அந்தி நேரமும் வந்தது.இருள் சூழ்ந்து கொண்டது.மலர்ந்திருந்த தாமரையின் இதழ்கள் மெல்ல மெல்ல குவி்ய ஆரம்பித்தன.மது மயக்கத்திலிருந்த வண்டு எதையும் அறியவில்லை.அது வெளியேறும் வரை தாமரையும் காத்திருக்கவில்லை.தன் இதழ்களை மூடிக் கொண்டது.
சற்று நேரம் கழித்து மயக்கம் தெளிந்து வண்டு விழித்தது.காரிருளைத் தவிர வேறெதுவும் தென்படவில்லை.இதழ் குவிந்த தாமரையில் மாட்டிக் கொண்டதை உணர சிறிது நேரம் பிடித்தது.ஆனாலும் பதறித் துடிக்கவில்லை.
காரிருள் கழியும்.அதிகாலை மலரும்.பகலவன் வரவை எதிர்கொண்டு தாமரை மீண்டும் மலரும்.நான் ஆனந்தமாய் வெளியில் பறந்து பாடித் திரிவேன் என பல கனவுகளில் மிதந்தது.
ஆனால் நடந்தது வேறு!
தாகம் தீர்ப்பதற்காக தடாகத்தில் இறங்கியது யானை ஒன்று.தன் மனம்போன போக்கில் தாமரை மலர்களினைப் பறித்து தடாகத்தின் வெளியே தூக்கி வீசியது.மீண்டும் மலர முடியாது தாமரை இதழ்கள் துவண்டன.அதில் சிறை கொண்ட கருவண்டின் கனவுகள் யாவும் கலைந்தன.
இதே நிலமைதான் மனிதருக்கும்.வாழ்க்கையில் சொத்து சுகபோகங்களையும், பாச நேச உறவுகளையும் தேடி ஓடுகிறோம்.பல தடைகள் வருகின்றன. துன்பங்கள் வதைக்கின்றன.உடனே நம்மை நாமே அறியாமல் பல கனவுகள் காண்கிறோம்.வளமான ஒரு எதிர்காலம் பற்றிய கனவுகளில் மூழ்கின்றோம். காலம் செல்கிறது.கனவுகளில் சில பலிக்கின்றன.பல கனவுகள் கலைகின்றன.கண்டவைகள் கனவுகள்தான் என்பதை உணர மறுக்கிறது மனித மனம்.
கலையும் கனவுகளுக்கு யார் பொறுப்பேற்பது என்ற கேள்விக்கு பதில் தெரியாது அலைகிறோம்.செய்யும் தவறுகளை மறந்து வாழ்வை வெறுக்கிறோம்.கண்ட கனவுகள் கலைந்த ஏக்கத்தில் உறவுகளை வெறுக்கிறோம்.பிரிவுகளை ஏற்கின்றோம்.கடைசியில் நரகத்தை தேடி பயணத்தை தொடர்கிறோம்.
இவையெல்லாம் அவசியமா? இது ஒன்றே புரியாத புதிராய் வாழ்வியலில்...

11 comments:
இங்கு வண்டுவாய் சிலரும் யானையாய் சிலரும் இருக்கின்றனர்...
இங்கு மட்டுமல்ல உலகத்தில் எங்கும்தான்
நல்ல பதிவு
நீண்ட நாளைக்குப் பிறகு பதிவு கண்டதில் மகிழ்ச்சி
அருமையான வரிகள் தங்கையே
குறிப்பாய் !
//மீண்டும் மலர முடியாது தாமரை இதழ்கள் துவண்டன.அதில் சிறை கொண்ட கருவண்டின் கனவுகள் யாவும் கலைந்தன.
பல கனவுகள் கலைகின்றன.கண்டவைகள் கனவுகள்தான் என்பதை உணர மறுக்கிறது மனித மனம்.//
அருமையான வரிகள்...
அழகாய் கனவுகள்...
மனிதர்கள் உணர வேண்டிய கருத்துக்கள்...
@சிட்டுக்குருவி,
ம்ம் நன்றி சகோதரா வருகைக்கும் கருத்துரைக்கும்
@Different தமிழ்,
நன்றி சகோதரா.தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்
@சே. குமார்,
நன்றி சகோதரா.தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்
@திண்டுக்கல் தனபாலன்,
ம்ம்.வாழ்வியலை உணரவைத்த உண்மையல்லவா?நன்றி சகோதரா.தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்
அருமையான வரிகள்
கலையும் கனவுகளுக்கு யார் பொறுப்பேற்பது???
நல்ல கேள்வி?
அருமையான பதிவு?
கலையும் கனவுகளுக்கு யார் பொறுப்பேற்பது என்ற கேள்விக்கு பதில் தெரியாது அலைகிறோம்.
அருமை வரிகள்
Post a Comment